கிரீக் , ஜூன் 18 (பெர்னாமா) -- வனவிலங்குகளை தமது கேமாராவில் பல விதமாய் படம் பிடித்து சமூக ஊடங்களில் பதிவேற்றி புகைப்படத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் குஹாப்பிரியா முத்துக்குமாரன் எனும் புகைப்படக் கலைஞரின் கைவண்ணம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.
பேராக் கிரீக்கில் உள்ள கம்போங் பொங்கோர் குடியிருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள தோட்டத்தில், உணவு தேடி வந்த 12 காட்டு யானைகளை நேரில் கண்டு புகைப்படம் எடுத்தது அவரின் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாகி உள்ளது.
இயற்கைச் சூழலில் சுதந்திரமாக உலா வந்த அந்த யானைகளை அருகில் பார்த்து அவற்றின் அரிய தருணங்களைத் தமது புகைப்படக் கருவியில் பதிவு செய்த அனுபவங்களை பெர்னாமா செய்திகளோடு பகிர்ந்து கொண்டார் குஹாப்பிரியா.
சம்பந்தப்பட்ட யானைகள் குறித்து சமூக வலைத்தளத்தில் ஒருவர் பகிர்ந்திருந்த நேரலைக் காட்சியைக் கண்டதும், அவரைத் தொடர்புகொண்டு சம்பவ இடத்திற்குச் சென்றதாக குஹாப்பிரியா கூறினார்.
தோட்டத்திற்குள் நுழைந்த அந்த யானைகள் அங்கிருந்த வாழைத் தோட்டங்களை பெருமளவில் சேதப்படுத்தியதுடன், குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் வந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்திலும் பதற்றத்திலும் இருந்தது தெரிய வந்ததாக அவர் கூறினார்.
அதேவேளை, அந்த அரிய காட்சியை பல்வேறு கோணங்களில் புகைப்படமாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் தமது கணவருடன் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
"அதன் பொருட்டு இன்று காலையில் நாங்கள் அங்குச் சென்றிருந்தோம். அங்கு யானையை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்து 12-இல் நான்கு யானைகளை அவர்களே நேற்றே ஏற்றி தாமான் நெகாராவில் சேர்த்து விட்டார்கள். இதர எட்டு யானைகளை ஏற்றும் ஏற்பாடுகளே இன்று நடைபெற்று வந்தன. நாங்கள் காலையிலே அங்குச் சென்றுவிட்டோம். எங்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அதில் குட்டி யானைகளும் இருந்தன. தாய் யானைகளும் இருந்தன. அனைத்தும் மிகவும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் காணப்பட்டன," என்றார் அவர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனவிலங்கு இலாகா அதிகாரிகள், சிறப்பு வசதிகளுடன் கூடிய பெரிய லாரிகளைப் பயன்படுத்தி யானைகளை மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடனும் ஏற்ற, அவற்றுக்கேற்ற இயற்கை வாழ்விடப் பகுதிக்கு இடமாற்றம் செய்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பையும் யானைகளின் நலனையும் ஒருங்கிணைந்து உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை, வனவிலங்கு பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே ஏற்படும் மோதல்களைக் குறைக்கும் முக்கிய முயற்சியாக எனவும் குஹாப்பிரியா குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)