சென்னை, ஜூன் 18 (பெர்னாமா) -- தமிழ்நாட்டில், புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகம், தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டம் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது சரித்திர நிகழ்வானது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப் பெற்றது மன நிறைவைத் தருவதாக ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.
அந்த உரையைத் தொடர்ந்து, அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் கணக்கு அறிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக சட்டமன்றத்தில் நீடித்து வந்த ஆளுநர் - மாநில அரசு மோதல் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிக்கை தற்பொழுது அரசியல் தளத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
மோசமான நிதிநிலை இருந்தாலும் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருப்பதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
அவர் பேசி முடித்ததும், ஆளுநர் உரையை தமிழில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் வரும் 22-ந் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும் என்றார்.
இதனிடையே, தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்தார்.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)