Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

20 கோடியே 92 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய சிலாங்கூருக்கான 15 திட்டங்கள்

19/06/2026 01:30 PM

ஷா ஆலம், ஜூன் 19 (பெர்னாமா) -- 20 கோடியே 92 லட்சத்து 60-ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் 15 திட்டங்களை உள்ளடக்கிய, இரண்டாம் கட்ட சிலாங்கூர் மீள்திறனை வலுப்படுத்தும் திட்டத்தை அம்மாநிலம் அறிவித்துள்ளது.

மேற்காசியாவில் மோசமடைந்துள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வியூக நடவடிக்கையாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

நிதியுதவியை மட்டும் இத்திட்டங்கள் உட்படுத்தவில்லை என்றும், மாறாக, முழுமையான பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளதாக அமிருடின் ஷாரி விவரித்தார்.

இதன்மூலம் கிடைக்கும் பலன்களை மாநிலத்தின் அனைத்து மக்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

மாநிலப் பொருளாதாரத்தின் பல்வேறு முக்கியத் துறைகளான தளவாடங்கள், உற்பத்தி மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் ஏற்பட்ட நெருக்கடியின் தாக்கத்தை ஆய்வு செய்த பின்னரே மாநில அரசாங்கம் இத்திட்டத்தை வகுத்ததாக அமிருடின் குறிப்பிட்டார்.

"சமூகப் பாதுகாப்பு அமைப்பு, பெர்கேசோ தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த 10,869 சிலாங்கூர்வாசிகளில், 23.45 விழுக்காட்டினர், அதாவது 2,549 பேர் சில்லறை வர்த்தகத் துறையில் பணிபுரிந்தவர்கள். அதேவேளையில் சமயம், வேலை இழந்தவர்களில் 21.3 விழுக்காட்டினர், அதாவது 2,316 பேர் உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்கள்," என்றார் அவர்.

இன்று, நடைபெற்ற சிலாங்கூர் சட்டமன்றத்தின் நான்காம் தவணைக்கான சிறப்புக் கூட்டத்தில், 'சிலாங்கூர் மீள்திறனை வலுப்படுத்தும் திட்டத்தை தாக்கல் செய்தபோது அமிருடின் அவ்வாறு தெரிவித்தார்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)