Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கோலாலம்பூரில் 287 பகுதிகளில் உள்ள சிறு வணிகத் தளங்களின் வசதிகள் மேம்படுத்தப்படும்

19/06/2026 01:36 PM

கோலாலம்பூர், ஜூன் 19 (பெர்னாமா) -- 'கோலாலம்பூரில் நிலையான வணிகம் 2026' எனும் திட்டத்தின் கீழ் 20 கோடி ரிங்கிட் நிதியை, கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், (டி.பி.கே.எல்) ஒதுக்கியுள்ளது.

கோலாலம்பூரில், 287 பகுதிகளில் உள்ள சிறு வணிகத் தளங்களின் வசதிகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த முன்னெடுப்பின் மூலம் 11,000-க்கும் மேற்பட்ட சிறு வணிகர்களும் நடைபாதை வியாபாரிகளும் பயனடைவார்கள் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் உகந்த சூழலில் அவர்களால் தங்களின் வியாபாரத்தை மேற்கொள்ள முடியும் என்றும் தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

மேம்பாட்டுத் திட்டங்களின் காரணமாக நடைபாதை வியாபாரப் பகுதிகளை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அப்பகுதி குடியிருப்பாளர்கள், வியாபாரிகள், கட்டிடக் குத்தகைதாரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கவனமாகக் கேட்டறிந்த பின்னரே, நியாயமும் சமநிலையும் கொண்ட அணுகுமுறையை டி.பி.கே.எல் பின்பற்றும் என்று அவர் தெரிவித்தார்

அண்மையில், UTC செந்தூல் அருகே உள்ள வணிக வளாகங்களின் வசதிகளை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இது, அவ்விடத்தில் உள்ள நடைபாதை வியாபாரப் பகுதியை மறுசீரமைக்கும் செயல்முறையின் ஒரு பகுதி என்றும், நடைபாதை வியாபார நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதோ அல்லது இடமாற்றம் செய்வதோ இதன் நோக்கம் அல்ல என்றும் ஹன்னா விளக்கினார்.

"டத்தோ பண்டாரும் டி.பி.கே.எல்-உம் இப்பணியைக் கண்காணித்து, எவ்விதத் தாமதமும் இன்றி அது சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வார்கள் என நம்புகிறேன். இப்பணி விரைவாக முடிக்கப்பட வேண்டும். ஏனெனில் இது போக்குவரத்தையும், இந்த உள்கட்டமைப்பைப் பயன்படுத்தும் மக்களையும் பாதிக்கக்கூடும்," என்றார் அவர்.

இன்று செந்தூல் UTC அருகிலுள்ள சிறு வணிக வளாகங்களைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் ஹன்னா அவ்வாறு பேசினார்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)