Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

போலி வணிக முத்திரைகளிலான 6 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய பொருள்கள் பறிமுதல்

19/06/2026 01:56 PM

கோலாலம்பூர், ஜூன் 19 (பெர்னாமா) -- கடந்த திங்கட்கிழமை ஜோகூர், ஜோகூர் பாருவின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், போலி வணிக முத்திரைகளிலான ஆறு லட்சம் ரிங்கிட் மதிப்புடைய பொருள்களை, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் பறிமுதல் செய்தது.

பதிவுசெய்யப்பட்ட வணிக முத்திரை உரிமையாளர்களின் அனுமதியின்றி, நன்கு அறியப்பட்ட பல்வேறு முத்திரைகளை கொண்ட பொருட்களை காட்சிப்படுத்திய மூன்று வணிக வளாகங்களில், தமது தரப்பு அதிரடி சோதனை நடத்தியதாக கே.பி.டி.என்-இன் அமலாக்கத் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்தார்.

பேரங்காடிகளில் விற்பனை செய்து வந்த வியாபாரிகள் மீதான ஒரு மாத கால உளவு நடவடிக்கையைத் தொடர்ந்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ அஸ்மான் அடாம் கூறினார்.

அதோடு, அவ்வியாபாரிகள் சம்பந்தப்பட்ட அந்த பொருள்களை இதர வணிகர்களுக்கு விநியோகித்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

தவறாகப் பயன்படுத்தப்பட்ட வணிக முத்திரையைக் கொண்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஆடைகள், கைப்பைகள், பணப்பைகள், வார்ப்பட்டைகள், வாசனைத் திரவியங்கள் போன்ற பல்வேறு வகை பொருள்களும், அது தொடர்பான வணிக ஆவணங்கள் உட்பட சுமார் 600,000 ரிங்கிட் மதிப்புடைய பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அஸ்மான் அடாம் குறிப்பிட்டார்.

விசாரணையை மேற்கொள்ளும் பொருட்டு, அவ்வளாகங்களின் உரிமையாளர் மற்றும் பராமரிப்பாளர் உட்பட உள்நாட்டவர் நால்வரை KPDN கைது செய்தது.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)