ஓமான், 19 ஜூன் (பெர்னாமா) -- அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல் போக்குவரத்து வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.
இருப்பினும், மோதலுக்கு முந்தைய நிலையை விட, கப்பல் போக்குவரத்தின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுக்கும் இடையில் புதன்கிழமை கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்தது.
பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப் பாதையில் வணிகப் போக்குவரத்து கிட்டத்தட்ட முடங்கிப் போனது.
ஆனால், தற்போது ஓமானின் Khasab பகுதியில், நீரிணைக்குச் செல்லும் கடலோர நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை பெரிய வர்த்தகக் கப்பல்கள் நீர்வழியில் பயணிப்பதைக் காண முடிந்தது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வணிகப் போக்குவரத்து எதுவுமின்றி வெறிச்சோடி காணப்பட்ட காட்சிக்கு முற்றிலும் அது மாறுபட்டு இருந்தது.
நீரிணையின் தெற்குக் கடற்கரையில், நங்கூரமிட்டிருந்த கப்பல்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.
இதனிடையே, தெஹ்ரானும் வாஷிங்டனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கான அனைத்துப் போக்குவரத்துக் கட்டணங்களையும் அடுத்த 60 நாள்களுக்குத் தள்ளுபடி செய்வதாக ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு மன்றம் வியாழக்கிழமை அறிவித்தது.
அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 5-வது பிரிவின் கீழ், பயணிக்க விண்ணப்பிக்கும் வர்த்தகக் கப்பல்களுக்கு இந்தக் கட்டண விலக்கு பொருந்தும் என்று அம்மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கப்பல்கள் தங்களின் பயண விண்ணப்பங்களை, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஈரானிய அமைப்பான பாரசீக வளைகுடா நீரிணை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த 60 நாள்கள் காலக்கட்டத்தில், ஈரான் அரசாங்கம் அதனுடன் தொடர்புடைய அனைத்து செலவுகளையும் ஏற்கும்.
இதனால் கப்பல்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படும்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செயலாக்கத்தை உறுதி செய்வதற்காக, இந்த விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை விரைவுபடுத்துமாறு பாரசீக வளைகுடா நீரிணை ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)