Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பேராக்கில் பன்றி பண்ணைகளை நவீனமயமாக்கும் நடவடிக்கை தீவிரம்

19/06/2026 07:57 PM

ஆயர் கூனிங், 19 ஜூன் (பெர்னாமா) --  பேராக் மாநிலத்தில் பன்றிப் பண்ணைகளை நவீன முறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

பன்றி பண்ணைகள் சுத்தமான முறையிலும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் படியும் இயங்குவதை உறுதிச் செய்ய, கடந்த 2016-ஆம் ஆண்டு விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சின் ஒப்புதலோடு இத்திட்டம் தொடங்கப்பட்டதாக, பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் கூறினார்.

2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் கொவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டம் போன்ற காரணங்களினால் அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், அவை 2022-ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டதாக, டத்தோ சிவநேசன் கூறினார்.

''இவ்வாண்டு இறுதிக்குள் பேராக்கில் சுமார் 70 விழுக்காடு பன்றிப் பண்ணைகள் நவீனமாக்கப்படும். எஞ்சிய 30 விழுக்காடு அடுத்தாண்டு டிசம்பர்க்குள் நிறைவடைந்து விடும். 2023-ஆம் ஆண்டுக்குள் அனைத்து பன்றிப் பண்ணைகளும் நவீனமயமாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசாங்கம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளனர்'', என்றார் அவர்.

2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பேராக் மாநிலத்தில் சுமார் 125 பன்றி பண்ணைகள் செயல்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 82-ஆக குறைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், மாநில அரசாங்கத்தின் கட்டாயத்தில் அவை மூடப்படவில்லை என்றும், மாறாக நோய் தாக்கம், நிதி சிக்கல் மற்றும் நவீன பண்ணை முறைக்கு மாற இயலாமை போன்ற காரணங்களினால் தாமாகவே செயல்பாட்டை நிறுத்தியதாக, சிவநேசன் விளக்கினார்.

நவீன பன்றிப் பண்ணையை அமைப்பதற்கான முதலீட்டு செலவு சுமார் 18 லட்சம் முதல் 10 கோடி ரிங்கிட் வரை செலவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பேராக்கில் தற்போது 82 பண்ணைகளில் 28 பண்ணைகள் 100 விழுக்காடு நவீனமயமாக்கப்பட்டுள்ள நிலையில், 6 பண்ணைகள் 90 விழுக்காடு, 8 பண்ணைகள் 80 விழுக்காடு, 2 பண்ணைகள் 70 விழுக்காட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாக சிவநேசன் கூறினார்.

மேலும், பண்ணைகள் திட்ட அனுமதிக்காக விண்ணப்பித்து வரும் நிலையில், இன்னும் 13 பண்ணைகள் தங்களின் பணிகளைத் தொடங்காமல் இருப்பதாக அவர் விவரித்தார்.

இன்று, பேராக், ஆயர் கூனிங்கில் உள்ள மேக்ஸ் மில் பன்றி பண்ணையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)