Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

அமைதியான அரசியல் சூழலே முதலீடுகளையும் மக்களின் நலனையும் உறுதிப்படுத்தும்

20/06/2026 05:21 PM

கப்பளா பத்தாஸ், 20 ஜூன் (பெர்னாமா) -- அரசியல் கருத்து வேறுபாடுகளும் இன உணர்வுகளும் நாட்டின் நிலைத்தன்மையை பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டினார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மலேசியா தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கும், அரசாங்கம் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் நலனில் கவனம் செலுத்துவதற்கும் ஒரு அமைதியான மற்றும் நிலையான அரசியல் சூழல் அவசியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அரச தந்திர உறவுகள், முதலீடு மற்றும் அனைத்துலக பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் இருந்து மலேசியா பயனடைவதற்கு நாட்டின் நிலைத்தன்மை, முக்கிய அடித்தளமாகும் என்றும் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

நீடித்த அரசியல் மோதல்கள் நாட்டிற்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். 

அதோடு, சந்தை நம்பிக்கை, ரிங்கிட்டின் மதிப்பு மற்றும் மலேசியாவை முதலீட்டு இலக்காகத் தொடர்ந்து தேர்வு செய்யும் முதலீட்டாளர்களின் ஆர்வம் ஆகியவற்றிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

''சில நேரங்களில் மக்கள், ஆம், நான் ஜோகூருக்கோ அல்லது நெகிரி செம்பிலானுக்கோ செல்லவில்லை. நான் துர்க்மெனிஸ்தானுக்குச் சென்றேன். மக்கள் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் தேர்தல்களில் மும்முரமாக, கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கும் கடுமையான தாக்கங்கள் ஏற்படுகிறது. ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இது நமது எதிர்கால எரிசக்தித் தேவைகள். என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? பிரதமர் அன்வார், நமது நட்பின் காரணமாக, நமது நல்லுறவின் காரணமாக என்று அதிபர் செர்தார் கூறினார்,'' என்றார் அவர். 

இன்று, கப்பளா பத்தாசில் Setia Fontaines தொழில்துறை பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய பிரதமர் அதனைக் கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]