Ad Banner
Ad Banner
 பொது

மதுபோதையில் வாகனம் ஓட்டிய நால்வர் கைது

21/06/2026 04:53 PM

சிரம்பான், 21 ஜூன் (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான், சிரம்பான் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட ஓப் சம்செங் மற்றும் ஓப் சம்செங் ஜாலான் எனும் சிறப்புச் சோதனை நடவடிக்கைகளில் 10 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் நால்வர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காவும், ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காவும் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை மாலை மணி 5 தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மணி 4 வரை நீடித்த இந்தச் சோதனையில், சாலையில் அத்துமீறி நடந்ததாக கருதப்படும் மேலும் ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஜாலான் சுங்கை ஊஜோங் (Jalan Sungai Ujong), ஜாலான் லிங்காரான் தெங்கா (Jalan Lingkaran Tengah), ஜாலான் புக்கிட் கெப்பாயாங் (Jalan Bukit Kepayang) மற்றும் ஜாலான் ராசா (Jalan Rasah) ஆகிய இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 115 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு, 105 வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. முஹமட் யாத்திம் ஒஸ்மான் தெரிவித்தார்.

''வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்கிறார்களா என்பதை உறுதி செய்ய, நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பிலும் சோதனைகளிலும் ஈடுபடுவோம். குறிப்பாக, இந்த மதுபோதை ஆசாமிகளைக் குறிவைத்து எங்களது அதிரடி நடவடிக்கைகள் தொடரும்,'' என்றார் அவர்.

மேலும், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 78 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இதில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதே அதிகபட்ச விதிமீறலாகப் பதிவாகியுள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]