கோலாலம்பூர், ஜூன் 23 (பெர்னாமா) -- மலாயாப் பல்கலைக்கழகத்தின், இந்திய ஆய்வியல் துறைக்கு அரசாங்கம் வழங்கிய 20 லட்சம் ரிங்கிட் ஆய்வுகள் மற்றும் மொழிபெயர்ப்பு அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.
முடியும் தருவாயில் இருக்கும் அந்நிதியை, இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக பயன்படுத்தி முடித்து, அதன் கணக்கறிக்கைகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் ரவிந்திரன் மாரையா தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலையில், மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 11-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போது, இந்திய ஆய்வியல் துறைக்கு 20 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை வழங்குவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
மலாயா பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் 2024ஆம் ஆண்டு ஆறாவது மாதத்திற்குப் பிறகு, அந்நிதி பயன்படுத்தத் தொடங்கியதாக முனைவர் ரவிந்திரன் மாரையா தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம், தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் பற்றாக்குறை, பழைமையான நூல்களைக் கண்டறிந்து இலக்கவியல் படுத்துவது, மலேசிய இந்தியர்கள் மற்றும் சமூகவியல் உட்பட பல ஆய்வுகள், 10 விரிவுரையாளர்கள் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்,
மேலும், இலக்கியம், சமயம், மொழி ஆகிய முக்கியமான கூறுகளின் அடையாளங்களைக் கண்டறிந்து, சரியான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் ஆய்வுகளும் தொடரப்பட்டு வருகின்றன.
அந்த ஆய்வுகள் அனைத்திற்கும் சரியான முறையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக முனைவர் ரவிந்திரன் விளக்கினார்.
''நம்மிடம் இரண்டு ஆய்வுகள் உள்ளன. முதலாவது மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்விதழ், மற்றொன்று தமிழ்ப்பேராய்வு. முதல் முயற்சியாக இவை இரண்டுமே தமிழில் scope categories-க்கு கொண்டுச் செல்ல முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறோம். அதற்கேற்ப முயற்சிகளை முனைவர் சில்லாழியும், முனைவர் மோகன்தாஸூம் செய்துக் கொண்டு வருகின்றனர்,'' என்றார் அவர்.
அதோடு, இந்நிதியின் பயன்பாடுகள் குறித்த முழுமையான தகவல்களையும் அறிக்கைகளையும் அவ்வப்போது அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டுச் சேர்ப்பதாக முனைவர் ரவிந்திரன் குறிப்பிட்டார்.
''மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பிரதமர் துறையிடம் அறிக்கைகள்/தகவல்கள் வழங்கிக் கொண்டுதான் இருப்போம். நிதி அங்கிருந்து வந்திருப்பதால் இந்தத் தகவல். முழுமையாக டிசம்பர் மாதம் ஒப்படைக்கலாம் என்று இருக்கோம்,'' என்றார் அவர்.
இதனிடையே, கடந்த ஆண்டு ரஹ்மத் முஸ்தஃபா அறக்கட்டளை சார்பில் இந்திய ஆய்வியல் துறைக்கு ஐந்து லட்சம் ரிங்கிட் நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அது சார்ந்த நிகழ்ச்சிகளும் திட்டங்களும் தயார்செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதேவேளையில், தங்கள் துறையின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திடம் 10 லட்சம் ரிங்கிட் நிதியை கோரவிருப்பதாகவும் ரவிந்திரன் கூறினார்.
''இன்னும் 10 லட்சம் ரிங்கிட் அரசாங்கத்திடம் கேட்கலாம் என்று எதிர்பார்ப்பு வைத்திருந்தோம். இருப்பினும், தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பார்க்கும்போது, பிரதமரை சந்திக்க முடியாத சூழல். எதற்காக இந்தப் பணம் கேட்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் எந்த அளவிற்கு நன்மை அடைவார்கள். இதன் மூலம் இந்திய ஆய்வியல் துறை எப்படி சமுதாயத்துடன் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்று பிரதமரிடம் பரிந்துரை செய்வோம்,'' என்றார் அவர்.
இன்று செவ்வாய்க்கிழமை பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் வழி அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)