Ad Banner
Ad Banner
 அரசியல்

ஜோகூர் தேர்தல்; நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் அன்வார்

23/06/2026 07:51 PM

தங்காக், 23 ஜூன் (பெர்னாமா) -- 16-வது ஜோகூர் மாநில தேர்தலில் போட்டியிடும் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை, நம்பிக்கைக் கூட்டணி, பி.எச் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு அறிவித்தார்.

அக்கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில், நம்பிக்கைக் கூட்டணியின் உறுப்பு கட்சிகளான கெஅடிலான், ஜசெக மற்றும் அமானா ஆகியவற்றைச் சேர்ந்த புதிய முகங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை எளிதானது அல்ல என்று கூறிய கெஅடிலான் கட்சித் தலைவருமான அன்வார், 1,000-க்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்ட போதிலும், கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்த 56 வேட்பாளர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்ததாக தமது உரையில் தெரிவித்தார்.

நேற்றிரவு, தங்காக் பாடாங் புக்கிட் கம்பீர் எக்ஸ்ட்ரீம் பார்க்கில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், நம்பிக்கைக் கூட்டணி தலைமைச் செயலாளர், டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், ஜசெக பொதுச் செயலாளர், அந்தோணி லோக் மற்றும் அமானா கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)