ஜித்ரா, 24 ஜூன் (பெர்னாமா) -- கடந்த வாரம் புக்கிட் காயு ஈத்தாமில் 14.63 கிலோகிராம் கஞ்சாவை விநியோகித்ததாக, தனியார் உயர் கல்வி கழகம், ஐ.பி.டி.எஸ் மாணவர் ஒருவர் மீது இன்று ஜித்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் நோர் ஷலியாதி முஹமட் சொப்ரி முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த 25 வயதான ஈஸ்வர் சிங்கிடம் இருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஜூன் 15-ஆம் தேதி, காலை மணி 11.46-க்கு, தாய்லாந்திலிருந்து மலேசியாவை நோக்கிச் செல்லும், புக்கிட் காயு ஈத்தாம் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகம், ICQS-இல், உள்ள சோதனைச் சாவடியில், ஈஷ்வர் கஞ்சா வகை போதைப்பொருளை விநியோகித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டம், செக்ஷன் 39B(1)(a)-இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் வேளையில், அதே சட்டம் செக்ஷன் 39B(2)-இன் கீழ் தண்டனை விதிக்கப்படலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்நபருக்கு மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
மரணத் தண்டனை விதிக்கப்படாவிட்டால், 30 ஆண்டுகளுக்கும் குறையாத சிறைத் தண்டனை மற்றும் 12 முறைக்கும் குறையாத பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் ஜாமீன் வழங்கப்படாத நிலையில், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அக்டோபர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)