Ad Banner
Ad Banner
 உலகம்

வெனிசுலாவில் நிலநடுக்கம்; அவசரநிலை அறிவிப்பு

25/06/2026 02:34 PM

கராகாஸ், 25 ஜூன் (பெர்னாமா) --  வெனிசுலாவில் நேற்று அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகாஸில் கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளன.

இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெனிசுலாவில் ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் கராகசுக்கு மேற்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் 7.5 ரிக்டர் அளவில் அதைவிட சக்திவாய்ந்த மற்றொரு அதிர்வு அந்நாட்டை உலுக்கியது.

அந்த இரண்டு நிலநடுக்கங்களுக்குப் பிறகு, அடுத்தடுத்து 20 நிலநடுக்கப் பின்னதிர்வுகள் பதிவாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேதங்கள் கடுமையாக இருப்பதால் வெனிசுலாவின் முக்கிய விமான நிலையமான மைக்கெட்டியா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இந்த பேரிடர் காரணமாக பெருமளவில் உயிர்ச்சேதமும், உள்கட்டமைப்பு வசதிகளுக்குக் கடுமையான சேதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

முதற்கட்ட கணிப்புகளின்படி 10,000 முதல் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக அதன் அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இந்த கடுமையான நிலநடுக்கங்களினால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக Truth Social சமூக ஊடகப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

வெனிசுலாவுக்கு உதவ அமெரிக்க அதிகாரிகளைத் தயாராக இருக்குமாறு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இதற்கான குறிப்பிட்ட உதவித் திட்டங்கள் எதையும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)