கோலாலம்பூர், 25 ஜூன் (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி வரையிலான கணக்கெடுப்பின்படி, ஆறாயிரத்து 197 பேர் அதாவது பணிபுரிபவர்களில் 0.04 விழுக்காட்டினர் மட்டுமே தங்கள் வேலையை இழந்துள்ள நிலையில், இது கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது.
2026 ஆண்டு மே மாதம் வேலை இழந்த 7,766 பேருடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை 20 விழுக்காடு குறைந்துள்ளதாக பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசிர் தெரிவித்தார்.
''2026-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, வேலை இடமாற்ற முயற்சிகளும் நேர்மறையான முன்னேற்றங்களைக் காட்டியுள்ளன. MYFutureJobs வேலைவாய்ப்புகளில் 55 விழுக்காட்டு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதாவது, 2026-ஆம் ஆண்டு ஏப்ரலில் 12,119 ஆக இருந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 18,756 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான மொத்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 62,644-ஆக உயர்ந்துள்ளது'', என்றார் அவர்.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான 500 கோடி ரிங்கிட் மதிப்புடைய நிலைத்தன்மை உதவித் திட்டத்தின் மூலம் தொழிலாளர் சந்தையை வலுப்படுத்துவதற்காக குறு மற்றும் சிறு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தொழில்துறை செயல்பாடுகளின் தொடர்ச்சியில் கவனம் செலுத்துவதும், வேலையிழப்புச் சிக்கலை சமாளிக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் அடங்கும் என்று அவர் மேலும் விவரித்தார்.
இன்று மக்களவை கேள்வி பதில் அமர்வின் போது அக்மால் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)