ஈப்போ, ஜூன் 25 (பெர்னாமா) -- தமது முன்னாள் கணவர் முஹமட் ரிடுவான் அப்துல்லாவை கைது செய்யவும் மகள் பிரசன்னா டிக்சாவைக் கண்டுபிடித்து கொடுக்கும் முயற்சியிலும் தவறியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் தேசிய போலீஸ் படைத் தலைவர் மற்றும் பல தரப்பினருக்கு எதிராக எம்.இந்திரா காந்தி தாக்கல் செய்த மனுவை ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இரு தரப்பினரின் வாதங்களைச் செவிமடுத்த பின்னர் செலவுத் தொகை குறித்து எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்காமல் நீதிபதி டத்தோ நோர்ஷரிடா அவாங் அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முன்னதாக விசாரணை ஒன்று தொடங்கப்பட்டு அது இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தீர்ப்பின் போது நோர்ஷரிடா கூறினார்.
எனவே, நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட விசாரணை இன்னும் நிறைவடையாத நிலையில், குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர்கள் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்கவில்லை அல்லது இணங்க மறுத்து விட்டார்கள் என்று முடிவு செய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே தமது முன்னாள் கணவரின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவக்கூடிய தகவல்கள் போலீசாரிடம் இருந்தபோதிலும் நடவடிக்கை மேற்கொள்வதில் தாமதம் காட்டுவதால் IGP-க்கு எதிராக நடவடிக்கை தொடங்க அனுமதி கோரி கடந்தாண்டு நவம்பர் 17-ஆம் தேதி இந்திரா காந்தி இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக, 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் இதேபோன்ற ஒரு வழக்கையும் விண்ணப்பத்தையும் அவர் தாக்கல் செய்திருந்த நிலையில், அதை கடந்த 2022-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)