பத்து காஜா , ஜூன் 25 (பெர்னாமா) -- நாட்டில் முதல் முறையாக கைதிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உயிர்காக்கும் ஆதரவு பயிற்சியான BASIC LIFE SUPPORT, BLS மற்றும் FIRST AID எனப்படும் முதலுதவி பயிற்சியையும் நடத்தியதற்காக பேராக், பத்து காஜா சீர்திருத்த மையம் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
பத்து காஜா மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இப்பயிற்சியில் 12 ஆண்கள், 30 பெண்கள் என மொத்தம் 42 கைதிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றிருந்ததாக பத்துகாஜா சீர்திருத்த மைய இயக்குநர் எஸ். தனபால் தெரிவித்தார்.
கைதிகளுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உயிர்காக்கும் பயிற்சியின் நோக்கம் குறித்து தனபால் விவரித்தார்.
"இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், கைதிகள் தங்களுடன் இருக்கும் மற்ற கைதிகளுக்கு அவசரகாலங்களில் உடனடியாக உதவக்கூடிய திறனைப் பெறுவதாகும்.
ஆரம்பத்தில் இப்பயிற்சியை மலேசியா மலேசிய சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை. எங்களின் பிரதான நோக்கம் சிறைச்சாலைக்குள் யாருக்காவது உடல்நலக் குறைவு அல்லது அவசரநிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும் கைதிகளே முதலில் உதவி செய்யக்கூடியவர்களாக உருவாக வேண்டும் என்பதுதான்," என்றார் அவர்.
மேலும், இது வெறும் பாதுகாப்பு அம்சத்திற்கான பயிற்சியாக மட்டும் இல்லாமல் விடுதலைக்குப் பின்னர் கைதிகளுக்கு வேலைவாய்பை பெறுவதற்கும் துணைப் புரியும் என்று தனபால் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதனிடையே, பயிற்சி வழங்கப்படுவதற்கு முன்னதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 42 கைதிகளுக்கும் பத்து காஜா மருத்துவமனை தரப்பிலிருந்து தேர்வு நடத்தப்பட்ட வேளையில், அத்தேர்வில் அவர்கள் அனைவரும் முழு தேர்ச்சி அடைந்தததாக பத்து காஜா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜெ.ஜெயகுமரன் தெரிவித்தார்.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த கைதிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
"அச்சான்றிதழ்களில் சிறைச்சாலையின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக பயிற்சியை நடத்திய அமைப்பின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் விடுதலையான பிறகு அவர்கள் வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் போது எந்தவித சமூக முத்திரையும் இல்லாமல் அச்சான்றிதழைப் பயன்படுத்த முடியும். இது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு புதிய வாயிலாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது," என்றார் அவர்.
நேற்று பத்து காஜா சீர்திருத்த மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மலேசிய சாதனை புத்தக அதிகாரி சித்தி ஹஜார் ஜோகூர், சீர்திருத்த மையம் மற்றும் மருத்துவமனைக்கு அங்கீகார சான்றிதழை வழங்கி சிறப்பித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)