ஜோகூர் பாரு , ஜூன் 25 (பெர்னாமா) -- அம்னோவிலிருந்து உடனடியாக விலகுவதாக அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினரான டத்தோ டாக்டர் முஹமட் ஃபுவாட் சர்காஷி இன்று அறிவித்துள்ளார்.
சுயமான முறையில் தமது கருத்துகளை வெளிப்படுத்தும் நோக்கில் எவ்வித வற்புறுத்தலும் இன்றி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரெங்கிட் தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினருமான அவர் இன்று தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்த முடிவு, அம்னோ மீது மாறுபட்ட கருத்துடைய தம்மை தற்போது வெளிப்படையான முறையில் விமர்சிப்பதையும் எளிதாக்கியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் நடப்பு நிலைமை மோசமடைவதற்கு முன்பே தவறுகள் என்று அவர் விவரித்தவற்றை அம்பலப்படுத்துவதற்கான ஒரு வகை அரசியல் துணிச்சலே தாம் கட்சியை விட்டு வெளியேறும் இந்நடவடிக்கை என்றும் அவர் விவரித்தார்.
தமது இச்செயல்கள் தனிப்பட்ட நலன்களால் தூண்டப்பட்டவை என்ற கருத்தையும், ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான முஹமட் ஃபுவாட் மறுத்திருக்கிறார்.
இதனிடையே, கடந்த 2022 ஜோகூர் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ரெங்கிட் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அவர் முன்னதாக உறுதிப்படுத்தியதோடு இளம் வேட்பாளரை அத்தொகுதியில் முன்னிறுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)