சிரம்பான், ஜூன் 25 (பெர்னாமா) -- ஜூன் 13-ஆம் தேதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்ட குற்றச்சாட்டை கெடா, ஜித்ரா மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஹைம் ஹில்மான் அப்துல்லா இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார்.
மாஜிஸ்திரேட் நூருல் சக்கினா ரோஸ்லி முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட கெடா மாநில தொழில் மற்றும் முதலீடு, உயர்கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க செயற்குழு உறுப்பினருமான அவர் அதனை மறுத்தார்.
நெகிரி செம்பிலான், ஜாலான் ஜெலுபுவில் உள்ள சிரம்பான் பாஸ் தலைமையகத்தில் பொது அமைதியைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக 53 வயதுடைய ஹைம் ஹில்மான் மீது குற்றம் பதிவாகியுள்ளது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 505(b)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
5,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் டாக்டர் ஹைம் ஹில்மானை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)