ஜோகூர், ஜூன் 26 (பெர்னாமா) -- போக்குவரத்து அமைச்சின் மடானி தத்தெடுப்பு பள்ளி திட்டத்தின் முதல் கட்டத்தில், ஜோகூர் மாநிலத்தில் உள்ள நான்கு தமிழ்ப்பள்ளிகள் உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 18 பள்ளிகள் இடம் பெற்றுள்ளன.
அந்த நான்கு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக மொத்தம் இரண்டு லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.
''நான் முன்பு குறிப்பிட்ட 3 பள்ளிகளில், ஃபோர்ட்ரோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பண்டார் ஶ்ரீ ஆலம் தமிழ்ப்பள்ளி, சுங்கை பிளென்டாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஒவ்வொன்றும் ஐம்பதாயிரம் ரிங்கிட், மொத்தம் 150,000 ஆயிரம் ரிங்கிட் நன்கொடையாக வழங்கியது, KL Consult நிறுவனம்.ஜாலான் காலிட் தமிழ்ப்பள்ளிக்கு ஐம்பதாயிரம் ரிங்கிட்டை Berjaya Corporation நிறுவனம் வழங்கியது,'' என்றார் அவர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு, மாணவர்களின் கல்வியை மேம்படுத்த உதவும் நோக்கில், உயர்மட்ட அரசாங்க நிர்வாகம், அரசாங்க நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், GLC அல்லது அரசு சார்ந்த முதலீட்டு நிறுவனங்கள் G-L-I-C மற்றும் வியூகப் பங்காளிகளின் ஈடுபாட்டுடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்திட்டத்தை தொடக்கி வைத்தார்.
கல்வி அமைச்சு, அமைச்சரவை உறுப்பினர்களுடன் இணைந்து உதவிகள் தேவைப்படும் பள்ளிகளை அடையாளம் கண்டு, அவற்றிற்கு தேவையான உதவிகளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக வோங் கா வோ கூறினார்.
''கடந்த 2025 ஆம் ஆண்டில், நாட்டில் இந்த மடானித் தத்தெடுப்புப் பள்ளித் திட்டத்தில் 921 பள்ளிகள் இடம் பெற்றன. இந்த ஆண்டு, நாங்கள் 1000 பள்ளிகளை மட்டுமல்ல.இந்த ஆண்டு மலேசியா முழுவதிலும் இருந்து 1500 பள்ளிகளை இலக்காகக் கொண்டுள்ளோம்,'' என்றார் அவர்.
நேற்று, ஃபோர்ட்ரோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற மடானி தத்தெடுப்பு பள்ளி திட்டத்தின் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது உரையாற்றிய வோங் கா வோ இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், இந்நிகழ்ச்சிக்கு தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜும் வருகைப் புரிந்திருந்தார்.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)