ஜோகூர் பாரு, ஜூன் 27 (பெர்னாமா) -- 16-வது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செயல்முறைக்குப் பின்னர், இத்தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 172 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெறப்பட்ட 172 வேட்புமனுக்களும் போட்டியிடத் தகுதியானவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள வேளையில், எந்தவொரு வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் எஸ்.பி.ஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்தார்.
தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணி தலா 56 வேட்பாளர்களையும் பெரிக்காதான் நேஷ்னல் 33 வேட்பாளர்களையும், மலேசிய BERSAMA கட்சி 15 வேட்பாளர்களையும், மலேசிய ஜனநாயக் கூட்டணி, MUDA கட்சி நான்கு வேட்பாளர்களையும், மலேசிய பூர்வக்குடி கட்சி, ASLI-யும் மலேசிய சோசியலிச கட்சி, PSM-மும் தலா ஒரு வேட்பாளரையும் களமிறக்கும் வேளையில், அறுவர் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுவதாக ரம்லான் ஹருன் தெரிவித்தார்.
''வேட்புமனு தாக்கல் செய்ய காலை 10 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 172 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று உறுதி செய்யப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தகுதியான மொத்தம் 172 வேட்புமனுக்களைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது,'' என்றார் அவர்.
போட்டியிடப்படும் 56 மாநில சட்டமன்றத் தொகுதிகளில், 14 தொகுதிகளில் இருமுனைப் போட்டியும், 27 தொகுதிகளில் மும்முனைப் போட்டியும், 12 தொகுதிகளில் நான்கு முனைப் போட்டியும், மூன்று தொகுதிகளில் ஐம்முனைப் போட்டியும் நிலவுகிறது.
இந்தத் தேர்தலில், 21 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரையிலான, மொத்தம் 138 ஆண்களும் 34 பெண்களும் போட்டியிட்டுகின்றனர்.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)