Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

700 இந்திய தொழில்முனைவோரை வலுப்படுத்தும்  ‘உயர்வு மடானி’  திட்டம் அறிமுகம்

30/06/2026 07:39 PM

கோலாலம்பூர், ஜூன் 30 (பெர்னாமா) -- இந்தியச் சமூகத்தின் பொருளாதாரப் பயணத்தில் ஒரு புதிய நம்பிக்கையாக, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா, நாடு தழுவிய அளவில் 700 தொழில்முனைவோருக்கு உதவும் நோக்கில் ‘உயர்வு மடானி’ எனும் திட்டத்தை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்தியத் தொழில்முனைவோரின் உழைப்பை ஊக்குவிக்கும் விதமாக முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டம், வெறும் உதவியாக மட்டுமின்றி  சமூகத்தின் பொருளாதார வலிமைக்கான ஒரு வலுவான அடித்தளமாகவும் கருதப்படுவதாக மித்ராவின் தலைமை இயக்குநர் கே. ரவிந்தரன் நாயர் தெரிவித்தார்.

‘உயர்வு மடானி’ திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், வழங்கப்பட்டிருக்கும் QR  குறியீட்டை வருடி, அதன் வழிகாட்டுதலை முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம் என்று ரவிந்தரன் நாயர் கூறினார்.

''தொழில்முனைவோரின் வணிகத் தேவைக்கேற்ப நிதியுதவி மூன்று பிரிவுகளாகத் தரம் பிரிக்கப்பட்டுள்ளது. குறு சிறு வணிகங்களுக்கு (Micro) 20,000 ரிங்கிட் வரையிலும், வளர்ச்சிப் பாதையில் உள்ள வணிகங்களுக்கு (Growth) 35,000 ரிங்கிட் வரையிலும், வணிகத்தை விரிவுபடுத்தத் துடிக்கும் தொழில்முனைவோருக்கு (High) 50,000 ரிங்கிட் வரையிலும் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு தொழில்முனைவோரும் தங்களின் வணிகத்தை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்துச் செல்ல இந்தத் திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்,'' என்றார் அவர்.

ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனி வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதால், தங்களின் தகுதிக்கு ஏற்ப தொழில்முனைவோர் இம்மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜூன் 29 முதல் இதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  ஜூலை 13-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் தகுதியுடைய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

இது குறித்த மேல் விவரங்களுக்கு, 03-8886 6221 அல்லது 03-8886 6196 என்ற  எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

21 முதல் 55 வயதுக்குட்பட்ட முறையான எஸ்.எஸ்.எம் பதிவு கொண்ட மலேசிய இந்தியர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் வியாபாரங்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு  ரவிந்தரன் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)