அமெரிக்கா, 30 ஜூன் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டியில், இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் நான்கு முறை வெற்றியாளரான ஜெர்மனியை வீழ்த்தி, பராகுவே இத்தொடரில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் நேரம் வரை இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டதை அடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பில், உலகின் 34-வது தரவரிசையில் உள்ள பராகுவே வெற்றி இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.
பாஸ்டன் அரங்கில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், இடைவேளைக்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பாக பராகுவே அணியின் ஜூலியோ என்சிசோ முதல் கோலை அடித்து தமது அணியை முன்னணி வகிக்க செய்தார்.
அதன் பின்னர், 54-வது நிமிடத்தில், ஜெர்மனியின் கை ஹாவர்ட்ஸ் ஆட்டத்தை சமப்படுத்தினார்.
கூடுதல் நிமிடங்கள் வரை ஆட்டம் சமநிலை கண்டதால், ஆட்டம் பினால்டி வரை சென்றது.
அதில் 4-3 என்ற கோல்கள் எண்ணிக்கையில், பலம் பொருந்திய ஜெர்மனிக்கு பராகுவே விடை கொடுத்தது.
பாராகுவேயின் இந்த வெற்றியை தொடர்ந்து, அந்நாட்டில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நெதர்லாந்தும் மொராக்கோவும் மோதிய ஆட்டத்திலும், கிட்டத்தட்ட அதே நிலையே நிலவியது.
120 நிமிடங்கள் வரை ஆட்டம் 1-1 என்று நீடித்த நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்க பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில், 3-2 என்ற கோல்களில், நெதர்லாந்தை தோற்கடித்து மொராக்கோ சிறந்த 16 ஆட்டங்களுக்கு தேர்வாகியது.
காலிறுதிக்கு தேர்வாகும் பொருட்டு, ஜூலை 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆட்டத்தில், மொராக்கோ கனடாவுடன் மோதவுள்ளது.
இன்று அதிகாலை நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில், ஜப்பானை 2-1 என்ற கோல்களில் தோற்கடித்து, பிரேசில் சிறந்த 16 ஆட்டங்களுக்கு முன்னேறியது.
ஹூஸ்டன் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில், ஜப்பானின் கைஷு சனோ முதல் கோலை அடித்து பிரேசிலை பின்னுக்குத் தள்ளினார்.
ஜப்பானின் முதல் கோலை அதன் ரசிகர்கள் கொண்டாடிய வேளையில், 58-வது நிமிடத்தில் பிரேசில் ஆட்டத்தை சமப்படுத்தியது.
அதன் பின்னர், ஆட்டம் விறுவிறுப்பான நிலையில், 66-வது நிமிடத்தில் பிரேசில் தனது வெற்றி கோலை அடித்து, ஜப்பானின் பயணத்தை முடித்து வைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)