கோலாலம்பூர், 30 ஜூன் (பெர்னாமா) -- 2026ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் குற்ற சட்ட மசோதாவை மக்களவை இன்று அங்கீகரித்தது.
வெளிநாடுகளில் நிகழும் குற்றங்களை உள்ளடக்கி அச்சட்டத்தின் அதிகார வரம்பை விரிவுபடுத்தி இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
வெளி வட்டாரத்திற்கான பயன்பாட்டை விரிவுபடுத்தும் இந்தத் திருத்தம், வெளிநாட்டில் குற்றம் புரியும் மலேசியர்கள் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிவிடாததை உறுதி செய்யும் என்று சட்ட மற்றும் கழகச் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.
இந்தச் சட்ட திருத்தத்தின் மூலம், மலேசியர்களை உட்படுத்தி வெளிநாடுகளில் நிகழும் அனைத்து வழக்குகளையும் மலேசியா ஏற்று நடத்தும் என்று அர்த்தமல்ல.
மாறாக, தனது சட்டங்களுக்கு இணங்க, வழக்கு விசாரணையை நடத்துவதற்கான முதன்மை அதிகார வரம்பை சம்பந்தப்பட்ட அந்நாடுகள் கொண்டிருக்கும் என்று, இச்சட்ட மசோதா தொடர்பான விவாதத்தை நிறைவு செய்து வைக்கும்போது, குலசேகரன் விளக்கினார்.
''இரு நாடுகளிலும் ஒரு புகார் அளிக்கப்பட்டால், வழக்கின் உண்மைகள், ஆதாரங்கள், சாட்சிகளின் இருப்பிடம் மற்றும் நீதியின் நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான நடவடிக்கையைத் தீர்மானிப்பதற்காக, அதிகாரிகள் அனைத்துலக ஒத்துழைப்பு வழிமுறைகள் மூலம் கலந்தாலோசித்து இணைந்து செயல்படுவார்கள்,'' என்றார் அவர்.
ஒரு மலேசியப் பிரஜை வெளிநாட்டில், குறிப்பாக சம்பந்தப்பட்ட நாட்டின் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டால், அந்த நாட்டின் சட்டத்தைப் பொருத்து முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)