Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஈரானிய அமைப்புகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

27/06/2026 06:37 PM

அமெரிக்கா, 27 ஜூன் (பெர்னாமா) -- அமெரிக்க இராணுவம் நேற்று, வெள்ளிக்கிழமை ஈரானிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான சேமிப்பு கிடங்குகள், கடலோர ரேடார் அமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்ற ஒரு வர்த்தகக் கப்பல் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதான ஈரானின் ஆளில்லா விமானத் தாக்குதல், போர் நிறுத்தத்தை பகிரங்கமாக மீறியதை காட்டுவதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது

மேலும், ஈரானின் இச்செயல், அந்த முக்கியமான அனைத்துலக வர்த்தக வழித்தடம் வழியான வர்த்தகம் பெருகி வரும் நிலையில், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை சீர்குலைத்துள்ளதாக அப்பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், தங்கள் தரப்பு, புதிதாகக் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படுவதையும், முழு வலிமையுடன் மற்றும் செயல்திறனுடன் இருப்பதையும் உறுதி செய்வதற்காக, கண்காணிப்புடனும் விழிப்புடனும் இருக்கும் என்று அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், ஹொர்முஸ் நீர்வழிப்பாதையைக் கடக்கும் வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பயண ஒருங்கிணைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவதாக அப்படைப்பிரிவு உறுதியளித்துள்ளது.

இதனிடையே, தெற்கு லெபனானில் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதைத் தொடர்ந்து, அமெரிக்கா மீண்டும் தனது வாக்குறுதிகளை மீறியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை,ஐ.ஆர்.ஜி.சி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் அங்கீகரிக்கப்படாத பாதைகள் வழியாக விதிமுறைகளுக்கு உட்படாத கப்பல் ஒன்று சென்றதைக் காரணம் காட்டி, அமெரிக்கா பல்வேறு காரணங்களைக் கூறி ஈரானின் கடலோரப் பகுதிகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஐ.ஆர்.ஜி.சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த ஆக்கிரமிப்புச் செயலுக்குப் பதிலடியாக, ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு நிலவரத்தில், இந்தத் தாக்குதல்கள் குறித்து கருத்துரைத்த அமெரிக்க துணை அதிபர் JD Vance, வன்முறைக்கு வன்முறையே பதிலடியாக கொடுக்கப்படும் என்று தமது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)