Ad Banner
Ad Banner
 பொது

தங்கும் விடுதியில் பரிசோதனை; போதைப்பொருள் விநியோகித்த தம்பதியர் கைது

01/07/2026 04:47 PM

பகாங், 01 ஜூலை (பெர்னாமா) -- பெந்தோங், கெந்திங் பெர்மாயில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், போலீசார் கடந்த திங்கள்கிழமை ஒரு தம்பதியைக் கைதுசெய்ததோடு, ஏழு லட்சத்து 28 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட மதிப்புடையதாக நம்பப்படும் பல்வேறு வகையிலான போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

37 வயதான உள்ளூர் ஆடவர் மற்றும் 35 வயதான வெளிநாட்டைச் சேர்ந்த அந்தப் பெண்ணும் மாலை மணி ஐந்து அளவில், சம்பந்தப்பட்ட வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் கைது செய்யப்பட்டதாக பஹாங் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் தெரிவித்தார்.

அறை ஒன்றிலும் காரிலும் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 2.9 கிலோகிராம் எடையுள்ள கெதாமின், 1.01 கிலோகிராம் கொக்கேன், 671 கிராம் எம்.டி.எம்.ஏ தூள் மற்றும் 538 கிராம் ஷாபு உள்ளிட்ட பல்வேறு வகையிலான போதைப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

அந்தத் தம்பதியினர் தடைசெய்யப்பட்ட பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அஸ்ரி அக்மார் கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் இருந்து அவை பெறப்பட்டு, கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் விநியோகிக்கப்பட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அவ்விருவருக்கும் முந்தையக் குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் கடந்த மூன்று மாதங்களாக அவர்கள் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் நம்பப்படுகிறது.

1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம், செக்‌ஷன் 39B-இன் கீழ் நடத்தப்படும் விசாரணைகளுக்கு உதவுவ, அந்தத் தம்பதியினர் ஜூலை 6 ஆம் தேதி வரை ஏழு நாள்களுக்குக் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)