அக்ரா, 01 ஜூலை (பெர்னாமா) -- கானாவின் அக்ரா நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, இதுவரை குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், எழுவரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்நாட்டின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து, 38 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7,761 குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்தில் இருப்பதாகவும், உள்துறை அமைச்சர் முஹமட் முபாராக் முந்தாக்கா நாடாளுமன்ற கூட்டத்தில் கூறியுள்ளார்.
அக்ராவில் ஒரே நாளில் 169 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதோடு, இது 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு கண்ட நான்காவது அதிகபட்ச அளவு இதுவென்று முஹமட் முபாராக் முந்தாக்கா கூறினார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மெத்தைகள், தளவாடங்கள் மற்றும் சொந்த உடமைகள் என மீட்கப்பட்ட பொருள்களை குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே பத்திரப்படுத்தி பிரித்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவசரகால நிதியை அரசாங்கம் திரட்டி வருவதாக, முபாராக் நாடாளுமன்றத்தில் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]