அர்லிங்டன், 01 ஜூலை (பெர்னாமா) -- உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் சிறந்த 32 நாடுகள் சந்திக்கும் ஆட்டங்களில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன.
அதில், நார்வே, பிரான்ஸ் மற்றும் மெக்சிக்கோ வெற்றி பெற்று சிறந்த 16 அணிகள் சந்திக்கும் ஆட்டங்களுக்கு முன்னேறின.
ஐவரி கோஸ்டுடன் விளையாடிய நார்வே, 39-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து முதல் பாதி ஆட்டத்தை முடித்து வைத்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் ஆட்டத்தை சமப்படுத்த, 86-வது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் இரண்டாவது கோலை அடித்து, நார்வே அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதனிடையே, சுவீடனுடன் மோதிய பிரான்ஸ் 3-0 என்ற கோல்களில் வெற்றி பெற்று தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்த ஆட்டத்திலும் கிலியன் எம்பாப்பே இரு கோல்களை அடித்து அசத்திய வேளையில், பிராட்லி பார்கோலா ஒரு கோலை அடித்து, பிரான்சை சிறந்த 16 ஆட்டங்களுக்கு அழைத்துச் சென்றார்.
இன்று நடைபெற்ற மூன்றாம் ஆட்டத்தில், உபசரணை நாடான மெக்சிகோ ஈக்வடோரை 2-0 என்ற கோல்களில் வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தின் இரு கோல்களுமே முதல் பாதி ஆட்டத்தில் அடிக்கப்பட்ட வேளையில், இரண்டாம் பாதியில் ஈக்வடோர் மேற்கொண்ட முயற்சிகள் ஏதும் பலனளிக்காமல் போனது.
இந்த வெற்றியின் மூலம், குழு அளவிலான அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முன்னேறிய பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினாவுடன் இணைந்து, மெக்சிகோ தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)