முட்டை விலைக்குறைப்பு; காலத்திற்கு ஏற்ற சரியான நடவடிக்கை

17/06/2024 08:12 PM

கோலாலம்பூர், 17 ஜூன் (பெர்னாமா) -- மக்களின் நிதிச்சுமையை, குறிப்பாக வாழ்க்கை செலவீனத்தைக் குறைக்கும் வகையில் ஒரு கோழி முட்டையின் சில்லறை விலையை மூன்று சென் குறைப்பதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு காலத்திற்கு ஏற்ற சரியான நடவடிக்கையாகும்.

ஆனால், அந்த விலை குறைப்பு உணவு வியாபாரிகள், குறிப்பாக தங்களின் வியாபாரத்தில் அதிகமாக முட்டைகளை பயன்படுத்துவோருக்கு, மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்துவதும் மறுப்பதற்கில்லை என்று மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனமான FOMCA-வின் தலைமை செயல்முறை அதிகாரி முனைவர் சரவணன் தம்பிராஜா கூறுகிறார். 

''அதுமட்டுமின்றி, B40 பிரிவை சேர்ந்த மக்களுக்கும் சுமையை ஏற்படுத்தாத வகையில் இது அமைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார் அவர். 

இதனிடையே, Sungkai, பேராக்கில் வெங்காய நடவு முன்னோடித் திட்டம் மேற்கொள்ளப்பட்டதை போலவே நாட்டில் அதிக முட்டை உற்பத்தியை அரசாங்கம் விரிவுபடுத்தலாம் என்ற பரிந்துரையையும் சரவணன் முன்வைத்தார். 

உலகச் சந்தையைப் பின்பற்றுவதால் அனைத்துக் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுக்கும் விலையைக் குறைக்க முடியாது என்பதை தங்கள் தரப்பு புரிந்து கொள்வதைத் தொடர்ந்து இந்த பரிந்துரை முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

நாடு முழுவதும் A, B, C கிரேட் முட்டைகளின் சில்லறை விலை ஒரு முட்டை 3 சென் குறைக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று காலை அறிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]