பொது

40 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

13/07/2024 07:19 PM

கோம்பாக், 13 ஜூலை (பெர்னாமா) -- நள்ளிரவு மணி 12 தொடங்கி அதிகாலை மணி நான்கு வரை பிரிக்ஃபில்ட்சில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 40 சட்டவிரோதக் குடியேறிகளை, கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை கைது செய்தது.

மூன்றிலிருந்து 61 வயதிற்குட்பட்ட 25 இந்தியப் பிரஜைகள், 10 இலங்கை பிரஜைகள், பாகிஸ்தான் மற்றும் மியான்மார் பிரஜைகள் தலா இருவர் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டதாக, கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முஹமாட் சௌபீ வான் யூசோப் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மலேசியாவில் தங்குவதற்கான முறையான ஆவணங்களைக் கொண்டிருக்கவில்லை, காலாவதியாகி அனுமதி அட்டை அல்லது கூடுதல் காலமாக இங்கே தங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் விவரித்தார்.

அந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடும் மாதம் 2,000 ரிங்கிட்டிற்கு வாடகை விடப்படுவதாகவும், ஒவ்வொரு வீட்டிலும் சுமார் எட்டு அந்நிய நாட்டினர் தங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் கட்டுமானம் மற்றும் உணவகங்களில் பணிபுரிபவர்கள் ஆவர் என்றும் வான் முஹமாட் மேலும் கூறினார்.

1959/63-ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை