பொது

சாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய நாட்டவர் மூவர் விபத்தில் பலி

13/07/2024 07:22 PM

ஷா ஆலம், 13 ஜூலை (பெர்னாமா) -- டமான்சாராவில் இருந்து கிள்ளான் நோக்கிச் செல்லும் NKVE நெடுஞ்சாலையின் 3.1-வது கிலோமீட்டரில், இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில், சாலை பராமரிப்புக் குத்தகை நிறுவன பணியாளர்கள் மூவர் பலியான வேளையில் ஒருவர் சிராய்ப்பு காயங்களுக்கு ஆளானார்.

24-இல் இருந்து 29 வயதிற்குட்பட்ட இந்தியப் பிரஜைகள் மூவர் மற்றும் வங்காளதேசி ஒருவரை உட்படுத்தி, இன்று அதிகாலை மணி 3.30-க்கு ஏற்பட்ட இவ்விபத்து குறித்து தங்கள் தரப்பிற்குத் தகவல் கிடைத்ததாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. முஹமாட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

இருபது வயதிற்குட்பட்ட உள்நாட்டு ஆடவர் ஒருவர் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அந்த நெடுஞ்சாலையில் இருந்த, நீர் தடுப்பு மற்றும் நெடுஞ்சாலை மத்திய தடுப்பை மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முஹமாட் இக்பால் கூறினார்.

அப்பகுதியில், சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக அவர்களின் சடலங்கள் ஷா ஆலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

சிராய்ப்பு காயங்களுக்கு ஆளானவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்விபத்தை ஏற்படுத்திய ஆடவரும் மேல் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டம் செக்‌ஷன் 41(1)-இன் கீழ், இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)