பொது

வெளிநாட்டினரையும் சிறார்களையும் வைத்து பிச்சை எடுக்கும் கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு

26/06/2024 08:18 PM

கோலாலம்பூர், 26 ஜூன் (பெர்னாமா) -- நேற்றிரவு , ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், நாட்டின் தலைநகர் பகுதிகளில் வெளிநாட்டினரையும் சிறார்களையும் பயன்படுத்தி, பிச்சை எடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டது.

அதிலும், பத்து மாதம் முதல் ஆறு வயதிலான சிறுவர்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்த பின்னர், பிச்சை எடுப்பதற்காக வெளிநாட்டவர்கள் அவர்களை அங்கு கொண்டுச் செல்வது மிகுந்த வேதனைக்குரிய செயலாகும்.

காலை நேரத்தில், ஜாலான் சௌ கிட், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, ஜாலான் செந்தூல் ஆகிய பகுதிகளில் செல்லும் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக அக்கும்பல் இவ்வழிமுறையை பயன்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.

மேலும், அவ்வாறு பிச்சை எடுப்பதால் வெளிநாட்டவர்களின் வருமானமும் கணிசமாக அதிகரிக்கிறது.

நேற்றிரவு மணி 9 அளவில் நான்கு மாடி கடை வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அந்த வெளிநாட்டினர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் பல இருமல் மருந்து பாட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, 800 ரிங்கிட் மாத வாடகையில் சந்தேகத்திற்குரிய பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் இந்திய நாட்டுப் பிரஜைகள் அங்கு தங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

சில சிறார்கள் உட்பட ஒரு சிறிய அறையில் சுமார் எட்டு பேர் தங்கியிருந்தனர்.

அதைத் தவிர்த்து சலவைக் கடைத் தொழில், தொலைத் தொடர்பு சாதனங்கள், முடித்திருத்தும் நிலையம் ஆகியவற்றின் பேரில் பயன்படுத்தப்பட்டு வந்த போலி கடப்பிதழ்களும் அச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)