பொது

மாமன்னரின் அரியணை விழாவில் பேராக் அரச 'நோபாட்' இசைக்கருவி வாசிக்கப்படும்

05/07/2024 06:42 PM

சிலாங்கூர், 5 ஜூல (பெர்னாமா) -- வரும் ஜூலை 20-ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் உள்ள பாலாய்ருங் ஶ்ரீயில் 17-வது மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அரியணை அமரும் சடங்கில், பேராக் மாநில அரச இசைக்கருவியான நோபாட் வாசிக்கப்படும்.

1982-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி, சுல்தான் இப்ராஹிம்-க்கும் மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா சாரித் சொஃபியாவிற்கும், பேராக், இஸ்தானா இஸ்கண்டாரியாவில் நடைபெற்ற திருமண சடங்கிலும் அக்கருவி இசைக்கப்பட்டதாக பேராக் அரச நோபாட் குழுத் தலைவர், அப்துல் அசி௶ யஹ்யா தெரிவித்தார்.

பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவின் அனுமதியுடன், தமது அரியணை அமருரும் சடங்கிற்கு நோபாட் இசைக்குழுவை இஸ்தானா நெகாராவிற்கு அழைத்தற்காக சுல்தான் இப்ராஹிமிற்கு அப்துல் அசிஸ் தமது நன்றியைக் கூறிக் கொண்டார்.

பேராக் அரச நோபாட் குழுவை இஸ்தானா நெகாராவிற்கு அழைத்து வருவதற்கான விண்ணப்பம், மிகவும் சிறப்பானது மட்டுமின்றி முழு மரியாதையுடன் நடைபெற்றதாக ஜூலை இரண்டாம் தேதி நடத்தப்பட்ட நேர்காணலின்போது, இஸ்தானா நெகராவின் டத்தோ படுக்கா மஹாராஜா லேலா, டத்தோ அசுவான் எஃபெண்டி Paduka Maharaja Lela, Datuk Azuan Effendy சைராகித்னைனி தெரிவித்தார்.

பேராக் அரச இசைக்கருவியான நோபாட்டை பயன்படுத்துவதற்காக சுல்தான் இப்ராஹிமே, சுல்தான் நஸ்ரினுக்கு கடிதம் எழுதியதாகவும், அதனை அரியணை அமரும் சடங்கிற்கான சிறப்பு செயற்குழுத் தலைவரும் தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் ஒப்படைத்ததாகவும் அசுவான் எஃபெண்டி கூறினார்.

இதனிடையே, 58 ஆண்டுகளாக பேராக் அரச நோபாட் குழுவுடன் வாசித்துவரும் அப்துல் அசிஸ், ஏழு பேர் அடங்கிய அக்குழு வாரத்தில் மூன்று நாள்கள் பயிற்சி செய்து வருவதாக குறிப்பிட்டார்.

அரியணை அமரும் சடங்கின்போது, ராஜா பெரங்காட், நோபாட் தபால்l மற்றும் ராஜா பெரங்காட் ஆகிய மூன்று பாடல்களுக்கு அக்குழு நோபாட் இசைக்கருவியை வாசிக்கவிருக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)