பொது

'பிரிக்ஸ்': மலேசியாவிற்கு 'நாட்டுப் பங்காளி' எனும் அந்தஸ்தை பெற உதவும்

09/07/2024 06:02 PM

கோலாலம்பூர், 09 ஜூலை (பெர்னாமா) -- 'பிரிக்ஸ்' (BRICS) எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அரசாங்கங்களின் அமைப்புடன் கொண்டிருக்கும் நல்லுறவு மலேசியாவிற்கு உடனடியாக ‘country partner’ அல்லது 'நாட்டுப் பங்காளி' எனும் அந்தஸ்தை பெற உதவும்.

அந்தச் சூழலில், மலேசியா தனது பங்கேற்பை இறுதி செய்வதற்கு முன்பதாக, அது ‘BRICS Partner Country Model’ அல்லது ‘New Partner Country’ என்று அறியப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

'பிரிக்ஸ்'-இல் இணையும் நோக்கத்தைத் தொடர்ந்து மலேசியாவின் கொள்கையும் இலக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, குறிப்பாக 'பிரிக்ஸ்' நாடுகளுக்கான உள்ளூர் ஏற்றுமதியின் திறனை அதிகரிப்பதில் எவ்வாறு உதவும் என்பது குறித்து இன்று மக்களவையில் ஈப்போ திமுர் நாடாளுமன்ற உறுப்பினர் லீ சுவான் ஹௌ எழுப்பியக் கேள்விக்கு டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.

'பிரிக்ஸ்'-இல் இணைவது மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறைக்கு ஏற்ப உள்ளதாகவும் இது பல்வேறு உலகளாவிய சவால்களைச் சமாளிக்க பலதரப்பு கொள்கையை ஆதரிப்பதாகவும் பிரதமர் விவரித்தார்.

இதனிடையே, 'பிரிக்ஸ்'-இல் இணைய மலேசியா எண்ணம் கொண்டிருப்பது, அந்நாடுகளின் உள்நாட்டு மற்றும் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதற்கு அல்ல என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

மாறாக, நாடு மற்றும் மக்கள், குறிப்பாக வர்த்தகர்கள், வணிகர்கள், முதலீட்டாளர்களுக்கு நன்மைகளை வழங்கக்கூடிய வியாபாரம், பொருளாதாரம் உறவை விரிவுப்படுத்துவது ஆகிய அம்சங்களுக்கே மலேசியா அதிக முக்கியத்துவம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆசிய பசிபில் பொருளாதார ஒத்துழைப்பு உட்பட வெளிநாடுகளுடனான உறவில், அனைத்து விவகாரங்களிலும் மலேசியா முழுமையாக உடன்படாததை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

'பிரிக்ஸ்'-இல் இணைவதால் மலேசியா எதிர்கொள்ளும் தாக்கம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்ததா என்று ஶ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டோரிஸ் சொஃபியா ப்ரோடி இன்று மக்களவையில் எழுப்பியக் கேள்விக்கு பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]