பொது

பள்ளத்தாக்கில் தவறி விழுந்த பெண் மீட்கப்பட்டார்

09/07/2024 07:50 PM

ஈப்போ, 09 ஜூலை (பெர்னாமா) -- நேற்று திங்கட்கிழமை, பேராக், கொர்பு மலையில் இருந்து இறங்கும்போது 10 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் தவறி விழுந்து காயமடைந்த பெண் இன்று அதிகாலை மீட்கப்பட்டார்.

35 வயதான அப்பெண் பின்னிரவு மணி 1.30-க்கு பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டதாக பேராக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, JBPM-இன் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் சபாரொட்சி நோர் அஹ்மாட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அதன் பின்னர், அப்பெண் சிகிச்சைக்காக சுகாதார அமைச்சு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நேற்று மாலை மணி 3.29-க்கு இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகவும் தம்புன் தீயணைப்பு நிலையத்தின் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் சபாரொட்சி நோர் அஹ்மாட் கூறினார்.

ஜூலை ஆறாம் தேதி தொடங்கி 34 பேருடன் கொர்பு மற்றும் காயோங் மலைகளை ஏறும் நடவடிக்கையில் அப்பெண் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]