பொது

ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸ் விபத்து தொடர்புடைய பேருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து

11/07/2024 06:27 PM

கோலாலம்பூர், 11 ஜூலை (பெர்னாமா) -- கடந்த ஜூன் 29ஆம் தேதி ஜாலான் கெந்திங் ஹைலண்ட்சில் நிகழ்ந்த விபத்து தொடர்புடைய பேருந்து நிறுவனத்தின் உரிமத்தை தரை பொது போக்குவரத்து நிறுவனம், APAD ரத்து செய்துள்ளது.

எம்.குமார் டிரான்ஸ் டுவர் நிறுவனத்தின் வாகன பெர்மிட் உட்பட சம்பந்தப்பட்ட உரிமையாளரின் உரிமத்தை ரத்து செய்யும் முடிவை உரிம ரத்து மற்றும் இடைநீக்க செயற்குழு, ஜேபிபிஎல் எடுத்ததாக APAD இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுப்பயணிகள் உயிரிழந்தனர்.

அந்நிறுவனம், 2010ஆம் ஆண்டு தரை பொது போக்குவரத்து சட்டத்தின்படி, உரிம விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதாலும் ஆபத்தான வகையில் வாகனத்தைச் செலுத்தியதாலும் அம்முடிவு எடுக்கப்பட்டது.

பரிசோதனையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதிகமான முந்தைய அபராதங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் விதிமுறைகளை பின்பற்ற இதர நிறுவனங்களுக்கு இந்நடவடிக்கை நினைவூட்டலாக அமையும் என்று  அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)