பொது

பேராக்கில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு கோடி ரிங்கிட் நிதி

12/07/2024 08:57 PM

கோபிசான், 12 ஜூலை (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டு தலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு கோடி ரிங்கிட் நிதி, முறையே வழங்கப்பட்டு வருவதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தில் 600-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ள வேளையில் அவை அனைத்தும் முறையாக செயல்பட்டு வருவதால் அவற்றிற்கான நிதியும் தங்கு தடையின்றி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், கொவிட் 19 பெருந்தொற்று காலக்கட்டத்தில் கட்டப்பட்டு வந்த பல ஆலயங்கள் பாதியிலே கைவிடப்பட்ட நிலையில், அதன் நிர்மாணிப்பு பணியைப் பூர்த்தி செய்யவும் போதுமான நிதி வழங்கப்பட்டு வருவதாக சிவநேசன் குறிப்பிட்டார்.

"மற்ற மாநிலங்களில் இல்லாத ஓர் அமைப்பான பேராக் மாநில இந்திய நலப்பிரிவானது இம்மாநிலத்தில் உள்ளது. அப்பிரிவிற்கு நானே பொறுப்பாளர். இந்தப் பிரிவிற்கு அரசாங்கம் முழு அங்கீகாரம் அளித்துள்ளது. எனவே இப்பிரிவிலிருந்து அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்படும் அனைத்து கடிதங்களும் முறையாக உரியவர்களிடம் சென்று சேர வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் அது குறித்து தமது புகார் அளிக்கும்," என்று அவர் கூறினார். 

மேலும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பேராக் மாநிலத்தில் தேவைக்கு அதிகமான வழிபாட்டுத் தலங்கள் இருப்பதால், இனி அங்கு புதிய ஆலயங்களை நிறுவக்கூடாது என்றும் மாநில அரசாங்கம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது குறித்து அவர் விளக்கமளித்தார்.

"அரசாங்கத்தின் இந்த உத்தரவை நானும் மதிக்கிறேன். ஏனெனில் இம்மாநிலத்தில் ஏறக்குறைய 600 ஆலயங்கள் உள்ளன. சில ஆலயத்திற்குச் சென்றால் அங்கு ஆட்கள் வருவது மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இருக்கிற ஆலயங்களை முறையாக பராமரித்தாலே போதுமானது," என்றார் அவர். 

மாநிலத்தில் சீனர்கள் 28 விழுக்காட்டளவு இருந்தாலும், 12 விழுக்காட்டளவு உள்ள இந்தியர்கள் தான் அங்கு அதிகமான வழிபாட்டுத் தலங்களை அமைத்துள்ளனர்.

அந்த வழிபாட்டுத் தலங்களை முறைப்படி பராமரித்து ஆலயப் பதிவு ரத்து செய்யாமல் பாதுகாப்பதே இன்றைய சூழ்நிலையில் விவேகமான முடிவு என்றும் சிவநேசன் கூறினார்.

இன்று கோபிசானில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 81 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய  கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)