உலகம்

நைஜீரியா: பள்ளிக்கூடம் இடிந்து விழுந்ததில் 22 மாணவர்கள் பலி

13/07/2024 05:29 PM

ஜோஸ், 13 ஜூலை (பெர்னாமா) -- நைஜீரியாவின் வடமத்தியப் பகுதியில் உள்ள இருமாடி பள்ளிக்கூடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 22 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களைத் தேடி மீட்கும் பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

15 வயது மற்றும் அதற்கும் கீழ்ப்பட்ட மாணவர்கள் வெள்ளிக்கிழமை காலையில் வகுப்புகளுக்குச் சென்ற சில நிமிடங்களில் ஜோஸ் எனும் நகரில் உள்ள சேயின்ட் கல்லூரி இடிந்து விழுந்தது.

அதிலிருந்த 154 மாணவர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் 132 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, Plateau மாநில போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, மீட்புப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் உட்பட பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பள்ளியின் வலுவிழந்த கட்டுமானம் மற்றும் அது ஆற்றின் ஓரத்தில் அமைந்திருந்ததே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று மாநில அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பள்ளிகளை உடனே மூட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)