விளையாட்டு

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி; தங்கம் வெல்வோருக்குக் கூடுதல் வெகுமதி வழங்கப்படலாம்

13/07/2024 07:24 PM

மலாக்கா, 13 ஜூலை (பெர்னாமா) -- 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தேசிய விளையாட்டாளர்களுக்கு அதிகமான வெகுமதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் வெல்பவர்களுக்குப் பல தரப்பினர் நன்கொடை வழங்க முன்வருவதால், அவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கலாம் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்திருக்கிறார்.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறும் தேசிய விளையாட்டாளர்களுக்கு ஊக்கம் மற்றும் ஆதரவை வழங்கத் தனியார் நிறுவனங்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று அவர் கூறினார்.

"அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அது (தங்கம் வெல்பவர்களுக்கு) இன்னும் 10 லட்சம் ரிங்கிட் வழங்கப்படும். ஆனால் தற்போது சில தனியார் நிறுவனங்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் விளையாட்டாளர்களுக்கு வெகுமதி வழங்க ரோட் டு கோல்ட் குழுவைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளன. அது தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் செய்யப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.

சனிக்கிழமை, மலாக்காவில் அடிப்படை நீச்சல் பயிற்சியைத் தொடக்கி வைத்த பின்னர்,  ஹன்னா செய்தியாளர்களிடம் பேசினார்.

ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தேசிய விளையாட்டாளர்களுக்கு அரசாங்கம் 10 லட்சம் ரிங்கிட்டை வெகுமதியாக வழங்கவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)