அரசியல்

நெங்கிரியின் தேமு வேட்பாளர் முன்னதாகவே அறிவிக்கப்படுவார்

13/07/2024 05:57 PM

கோலா நெருஸ், 13 ஜூலை (பெர்னாமா) -- நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் தேசிய முன்னணியின் வேட்பாளர் முன்னதாகவே அறிவிக்கப்படுவார்.

கிளந்தான் அம்னோ பரிந்துரைத்த மூன்று வேட்பாளர்களில் ஒருவரைக் கட்சி தேர்வு செய்து விட்டதாக அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் தலைவரான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் அமிடி தெரிவித்தார்.

தேர்வு செய்யப்பட்டிருக்கும் வேட்பாளர் ஆண் என்று கூறிய டாக்டர் அஹ்மாட், அவரின் பெயர் எப்போது அறிவிக்கப்பட வேண்டும் என்பதை கிளந்தான் மாநில அம்னோ தலைவர் டத்தோ அஹ்மாட் ஜஸ்லானிடமே விட்டுவிடுவதாகத் தெரிவித்தார்.

அப்பகுதியில் உள்ள வாக்காளர்களைச் சந்திக்க வேட்பாளருக்கு போதிய கால அவகாசம் வழங்கும் வகையில், நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றுஅஹ்மாட் ஜஸ்லான் நேற்று கூறியிருந்தார்.

நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேற்கொள்ளப்படும் நிலையில், ஆகஸ்ட் 13-ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும்.

இடைத்தேர்தல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)