பொது

இணையப் பகடிவதை பிரச்சனைகளைக் களைய புதிய சட்டத்தை இயற்ற எம்சிஎம்சி பரிசீலனை

13/07/2024 07:10 PM

கோலாலம்பூர், 13 ஜூலை (பெர்னாமா) -- குற்றவியல் சட்டம், 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் உள்ளிட்ட, நடப்பில் உள்ள சட்டங்களை மறு ஆய்வு செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவிப்பை, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி வரவேற்கிறது.

அதோடு, இணையப் பகடிவதை பிரச்சனைகளைக் களைய, புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் எனும் தேவையையும் அது பரிசீலிக்கிறது.

உயிரிழப்பை ஏற்படுத்திய இணையப் பகடிவதை பிரச்சனைக்குத் தீர்வு காண அரசாங்கம் கடப்பாடு கொண்டிருக்கிறது என்பதற்கான முக்கிய சமிக்ஞையை இந்த அறிவிப்பு புலப்படுத்துவதாகவும் இன்று வெளியிட்ட அறிக்கையில் எம்.சி.எம்.சி குறிப்பிட்டுள்ளது.

அமலாக்கத் தரப்பினர், மிகவும் திறம்பட தங்களின் பணியைச் செய்வதற்கு அந்நடவடிக்கை முக்கியம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் அது வழிவகுக்கும் அது கூறியது.

இணையப் பகடிவதை தொடர்பான புகார்களை விசாரிக்க, தமது தரப்பும் அரச மலேசிய போலீஸ் படையும், செயல்பாட்டுத் தர விதிமுறையைப் பரிசீலிக்கும் என்றும் எம்.சி.எம்.சி  தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் இணையப் பகடிவதை பிரச்சனைகளைக் களைய, தொடர்பு அமைச்சு,குற்றவியல் சட்டம் மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான ஆய்வை மேற்கொள்ளும் என்று, நேற்று அதன் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)