பொது

அரியணை அமரும் விழா; புருணை சுல்தானும் பஹ்ரெய்ன் மன்னரும் பங்கேற்பு 

20/07/2024 11:52 AM

கோலாலம்பூர், 20 ஜூலை (பெர்னாமா) -- இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்று வரும் மாட்சிமை தங்கிய 17ஆவது மாமன்னரின் அரியணை அமரும் விழாவில் புருணை சுல்தானாகிய ஹசானால் பொல்கியா கலந்து கொண்டது இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய உறவை புலப்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை தமது 78ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய புருணை சுல்தான், தமது துணைவியார் ஹாஜா சலெஹாவுடன் காலை மணி 9.34-க்கு  இஸ்தானா நெகாராவுக்கு வருகையளித்தார்.

இஸ்தானா நெகாராவின் பாலாய்ருங் ஶ்ரீ-இல் நடைபெற்ற அரியணை அமரும் விழாவில் பங்கேற்க பஹ்ரெய்ன் மன்னரான ஷேக் ஹமாட் பின் இசா கஃலிபாவும் காலை மணி 9.25-க்கு வந்திருந்தார்.

மேலும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார், அவரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், தொடர்பு அமைச்சரும், மாமன்னரின் அரியணை அமரும் சடங்கிற்கான சிறப்பு செயற்குழு தலைவருமான ஃபாஹ்மி ஃபாட்சில் , அவரின் துணைவியார் அஸ்ரினா புத்ரி முஹமட் மாஹ்யுடின் ஆகியோர் வெளிநாட்டு அரச விருந்தினர்களை வரவேற்றனர்.  

இரு அரச விருந்தினர்களும் மரியாதை நிமித்தமாக டத்தாரான் இஸ்தானா நெகாராவுக்கு அழைத்து செல்லப்பட்ட பின்னர் இரு நாட்டு தேசிய கீதங்களும் பாடப்பட்டன. 

மாமன்னரின் அரியணை விழாவுடன், இன்று இரவு இஸ்தானா நெகாராவில் நடைபெறவிருக்கும் அரச விருந்துபசரிப்பில் ஹசானால் பொல்கியாவும் ஷேக் ஹமாட்டும் கலந்து கொள்வர்.  

அரியணை அமரும் விழாவில் மலாய் ஆட்சியாளர்கள், மாநில ஆளுநர்கள், பிரதமர், அமைச்சரவையினர் உட்பட முக்கிய தலைவர்கள் என்று சுமார் 700 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)