உலகம்

வங்காளதேசம்: போராட்டங்களுக்கும் வன்முறைகளுக்கும் காரணமான பெரும்பாலான இட ஒதுக்கீட்டுத் திட்டங்கள் ரத்து

22/07/2024 05:30 PM

டாக்கா, 22 ஜூலை (பெர்னாமா) -- வங்காளதேசத்தில் போராட்டங்களுக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமான பெரும்பாலான இட ஒதுக்கீட்டுத் திட்டங்களை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதோடு, சுதந்திர போரில் ஈடுபட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பொதுச் சேவைதுறையில் ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படலாம் என்றும் அது தீர்ப்பளித்துள்ளது.

அந்நாட்டில் அரசாங்க வேலைகளில் மேற்கொள்ளப்படும் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசாங்க வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு சுதந்திர காலத்தில் விடுதலை போரில் உயிரிழந்த படைவீரர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த ஒதுக்கீட்டு முறை பாரபட்சமானது என மாணவர்கள் வாதிடுவதோடு தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோருகின்றனர்.

இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீட்டு நடைமுறைடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதோடு, அரசுப் பணிகளில் தேர்வுகள் மூலம் தேர்ச்சியடையும் தகுதியானவர்களுக்கு 93 விழுக்காடும், விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினருக்கு 5 விழுக்காடும், எஞ்சிய 2 விழுக்காடு சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவர்களுக்கும் என்று உத்தவிடப்பட்டுள்ளது.

இந்த முடிவை அரசாங்கம் ஒரு சில நாட்களில் அமல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர்களின் போராட்டமும் வன்முறையும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]