பொது

சோதனை நடவடிக்கையில் மனமகிழ்வு மையங்களில் பணிபுரிவதாக நம்பப்படும் 117 பேர் கைது

27/07/2024 06:13 PM

சிலாங்கூர், 27 ஜூலை (பெர்னாமா) -- குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில், மனமகிழ்வு மையங்களில் பணிபுரிவதாக நம்பப்படும் அந்நிய நாட்டுப் பெண்கள் 85 பேர் உட்பட 117 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாஙான் உட்பட நெகிரி செம்பிலான், சிரம்பானில் ஏழு வெவ்வேறு பகுதிகளில் அந்தச் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அந்நிய நாட்டவர்களை உட்படுத்திய விபச்சார வளாகங்களில் பாதுகாவலர்களாக பணிபுரிவதாக சந்தேகிக்கப்படும் 27-இல் இருந்து 63 வயதிற்குட்பட்ட உள்நாட்டு ஆடவர்கள் பத்து பேரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

2007-ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் கடத்தல் மற்றும் மனித கடத்தல் எதிர்ப்புப் பிரிவு, ATIPSOM, 2001-ஆம் ஆண்டு கள்ளப் பண பரிமாற்றம் எதிர்ப்பு பிரிவு, புத்ராஜெயா உட்பட பேராக் குடிநுழைவுத் துறை தலைமையகங்களின் ஒத்துழைப்புடன் புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கை பிரிவு நண்பகல் மணி 12.32-க்கு இச்சோதனை நடவடிக்கை தொடங்கியது.

1959/ 63-ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம், 1966-ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டம் மற்றும் 1963-ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறைகளின் கீழ் அந்த அனைத்து அந்நிய நாட்டவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர் விசாரணைக்காக அவர்கள் அனைவரும், லெங்கேங் மற்றும் புக்கிட் ஜாலில் குடிநுழைவு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)