பொது

சிலாங்கூரில் 20 நிலையங்களை உட்படுத்திய LRT3 கட்டுமானத் திட்டம் நிறைவுப்பெற்றது

29/07/2024 04:15 PM

கிள்ளான், 29 ஜூலை (பெர்னாமா) -- சிலாங்கூரில், 20 நிலையங்களை உட்படுத்திய, LRT3 எனப்படும் மூன்றாவது இலகு ரயில் கட்டுமானத் திட்டம் நிறைவுப்பெற்று, அடுத்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டார் உத்தாமாவில் இருந்து ஜொஹன் செத்தியா வரையிலான ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகள் 95.6 விழுக்காடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் வேளையில், இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் அவை முழுமையாக நிறைவடையும் என்று போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லோக் தெரிவித்தார்.

''அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்ட அசல் அட்டவணையுடன் ஒப்பிடும்போது சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், கொவிட்-19 காலக்கட்டத்தில் நிறைய பணிகள் தடைப்பட்டன. எனவே, வேலை நேரம் மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படையில் ஒரு சிறிய பின்னடைவு உள்ளது. குத்தகையாளர் மற்றும் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும், தாமதமானைதை நிறைவு செய்ய முயற்சிக்கின்றனர்,'' என்றார் அவர்.

இன்று, சிலாங்கூர், கிள்ளானில் உள்ள பசார் ஜாவா LRT3 நிலையத்தின் கட்டுமானப் பணிகளின் அண்மைய நிலவரத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி லோக் அவ்வாறு கூறினார்.

முன்னதாக LRT3 திட்டத்தில் இருந்த டிரோப்பிகானா, தெமாஸ்யா, ராஜா மூடா, புக்கிட் ராஜா மற்றும் பண்டார் பொதானிக் உள்ளிட்ட ஐந்து நிலையங்களை மீண்டும் இணைப்பதற்கு கடந்த ஜூலை ஐந்தாம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

மூன்று பெட்டிகள் கொண்ட ஏழு ரயில்களை கூடுதலாக வாங்குதல், ஜொஹான் செத்தியாவில் உள்ள ரயில் கிடங்கை விரிவுப்படுத்துவது, 150 மின்சார பேருந்துகளை வாங்குதல் மற்றும் இரண்டு பேருந்து கிடங்குகளின் கட்டுமானம் ஆகியவை அதில் உட்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)