பொது

பல்வேறு வகையான விலைப்பொருட்களைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

01/08/2024 06:38 PM

கிள்ளான், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மூன்று கோடியே 8 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான, 231 ஆடம்பர வாகனங்கள் உட்பட பல்வேறு வகையான விலைப்பொருட்களைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், அரச மலேசிய சுங்கத்துறையின் சிலாங்கூர் மாநில மத்திய மண்டல இரண்டாவது பிரிவு மேற்கொண்ட ஆறு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் அம்முயற்சி முறியடிக்கப்பட்டதாக ஜேகேடிஎம்-இன் மத்திய மண்டல சுங்கத்துறை உதவி இயக்குநர் நோர்லேலா இஸ்மாயில் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 25 மற்றும் 27-ஆம் தேதிகளில், வடக்கு துறைமுக தடையற்ற வாணிப மண்டலத்தில் 84 கொள்களன்களின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் வழி அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் இருந்து, அந்த கொள்கலன்கள் கொண்டு வரப்பட்டது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட மதிப்பிலான ஒரு மின்சார வாகனம் உட்பட அனைத்து வாகனங்களும் உள்நாட்டு சந்தையில் விற்பதற்கு என்றும் நோர்லேலா தெரிவித்தார்.

''சம்பந்தப்பட்ட கொள்கலன்களைப் பரிசோதனைச் செய்ததில், இறக்குமதி பெர்மிட் இல்லாததாக நம்பப்படும் 31 வாகனங்களை (எங்கள்) குழு கண்டுபிடித்தது. அதன் வர்த்தக மதிப்பு 17 லட்சத்து 89 ஆயிரம் ரிங்கிட் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அது 30 லட்சத்து 3,000 ரிங்கிட் வரியையும் உட்படுத்தியுள்ளது,'' என்றார் அவர்.

அதோடு, அதே துறைமுகத்தில் கடந்த ஜூன் 6-ஆம் தேதி, உள்நாட்டு சந்தையில் விற்பதற்கு என்று நம்பப்படும் ஒரு கொள்கலனில் 6,500 மரங்களையும் தங்கள் தரப்பு பறிமுதல் செய்ததாக நோர்லேலா தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)