பொது

சிறுமியைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரின் தடுப்புக் காவல் உத்தரவு நீட்டிப்பு

29/07/2024 03:42 PM

ஜோகூர் பாரு, 29 ஜூலை (பெர்னாமா) -- ஆல்பர்டைன் லியோ ஜியா ஹுய் எனும் ஆறு வயது சிறுமியைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரின் தடுப்புக் காவல் உத்தரவு மேலும் ஆறு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேன் நோர்ஃபஸ்லின் ஹம்டான் இன்று ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

31 வயதுடைய அந்தச் சந்தேக நபரின் தடுப்புக் காவல் உத்தரவை நாளை தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கும்படி நோர்ஃபஸ்லின் உத்தரவிட்டார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 365 மற்றும் 2017-ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல் சட்டம் செக்‌ஷன் 14 (a)-வின் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு, அவர் இன்று வரை ஏழு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அச்சந்தேக நபர் , பலத்த போலீஸ் காவலுடன்,காலை மணி 8.50-க்கு நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

ஜூலை 20-ஆம் தேதி பேரங்காடி ஒன்றில் ஜியா ஹுய் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்டது.

ஜூலை 23-ஆம் தேதி அதிகாலை மணி 4.45-க்கு சிலாங்கூர், பத்தாங் காலியில் உள்ள மலிவு விலை தங்கும் விடுதியில் அச்சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அவரோடு இருந்த ஆடவர் ஒருவரை போலீஸ் கைது செய்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)