விளையாட்டு

2024 பாரிஸ் ஒலிம்பிக் செய்தி தொகுப்பு

01/08/2024 07:07 PM

பாரிஸ், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) --  ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் வழி தமது பதக்க பட்டியலில் இன்று எட்டாவது தங்கத்தை சேகரித்திருக்கின்றார் அமெரிக்காவின் நீச்சல் வீராங்கனை Katie Ledecky.

அது குறித்த தகவலோடு, ஒலிம்பிக் போட்டியின் மேலும் சில விளையாட்டுச் செய்திகளின் தொகுப்பைக் காண்போம்.

இன்று அதிகாலையில், நடைபெற்ற மகளிருக்கான 1500 மீட்டர் freestyle நீச்சல் ​போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற Katie Ledecky, இது தமது சேகரிப்பில் எட்டாவது தங்கம் என்றும் இது எளிதான காரியம் அல்ல என்றும் கூறியுள்ளார்.

27 வயதான அவர் 15 நிமிடம் 30.02 வினாடிகளில் போட்டியை முடித்த வேளையில், 10 விநாடிகள் வித்தியாசத்தில், இரண்டாவது இடத்தை பிரான்ஸ் பிடித்தது.

இந்த வெற்றியின் மூலம் நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் நீச்சல் வீராங்கனை என்ற பெருமையையும் Katie Ledecky, பெற்றார்.

இதனிடையே, ஆடவருக்கான நீச்சல் ​போட்டியில், சீனா தனது முதல் தங்கத்தை வென்றது.

100 மீட்டர் freestyle பிரிவில், 46.40 வினாடிகளில் போட்டியை முடித்து Pan Zhanle தமது சொந்த உலக சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார்.

19 வயதான அவர், கடந்த பிப்ரவரி மாதம் டோஹாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 46.80 வினாடிகளில் தமது முதல் உலக சாதனையைப் படைத்திருந்தார்.

டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில், கார்லஸ் அல்காராஸுடன் 
கை கோர்த்த ராஃபெல் நடால் ஜோடி அமெரிக்க இணையரிடம் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்த ஸ்பெயின் ஜோடி, 6-2, 6-4 என்ற நேரடி செட்களில், தோல்வி கண்டதால், அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பையும் நழுவ விட்டுள்ளது.

தமது பதக்கங்களை அதிகரிக்கும் முயற்சியில் ஒலிம்பிக்கில் களமிறங்கிய ராஃபெல் நடால் முன்னதாக, தனிநபர் பிரிவிலும் நோவாக் ஜோகோவிச்சிடம் தோல்வி கண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)