பொது

'LIFT DUMP SPOILER' தவறுதலாக நீட்டிக்கப்பட்டதே எல்மினா விமான விபத்துக்கான முக்கிய காரணம்

16/08/2024 06:35 PM

கோலாலம்பூர், 16 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி, சிலாங்கூர், ஷா ஆலம், பண்டார் எல்மினாவில் BEECHCRAF 390 PREMIER 1 ரக விமானம், தரையிறங்குவதற்கு முன் சோதனையின்போது 'lift dump spoiler' தவறுதலாக நீட்டிக்கப்பட்டதே அவ்விமான விபத்திற்கான காரணம் என்று அதன் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அறுவரின் உயிரிழப்பிற்கு காரணமான அவ்விபத்துக்கு முன்னதாக அதன் பணியாளர்களுக்குப் போதிய பயிற்சி மற்றும் 'lift dump'-ப்பின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாமையுமே காரணங்களாக இருப்பதாக விசாரணை அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, இச்செயல்பாடுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து துணை விமானிக்கு போதிய அறிவுத்திறன் இருந்தும் அதன் செயல்பாட்டு தவறுக்கு வழிவகுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நடவடிக்கையால் பறக்கும் திறனில் திடீரென முடக்கம் ஏற்பட்டது.

அதனால் கட்டுப்பாட்டை இழந்த அவ்விமானம் விபத்துக்குள்ளானதாக 148 பக்கங்கள் அடங்கிய விசாரணை அறிக்கை விவரித்தது.

கடந்தாண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி லங்காவி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து, சுபாங் விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் அவ்விமானம் விபத்துக்குள்ளானது.

இத்துயர் சம்பவத்தில் இரு விமானிகள், ஆறு பயணிகள், ஒரு e-hailing ஓட்டுநர் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளோட்டி என்று மொத்தம் 10 பேர் பலியாகினர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]