அரசியல்

மக்கோத்தாவில் புதிய முகம் போட்டியிடலாம்

17/08/2024 05:57 PM

கோலாலம்பூர், 17 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தைப் பிரதிநிதித்து புதிய வேட்பாளரைத் தேசிய முன்னணி களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பிலான கூடுதல் விவரங்கள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் செயலகக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று தேசிய முன்னணித் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''புதிய முகம். நேரம் வரும்போது நான் அறிவிப்பேன். அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் செயலகக் கூட்டத்தில் கலந்தாலோசிப்போம். எந்தவொரு தொகுதியும் குறிப்பிட்ட ஒரு கட்சியின் வசம் இருந்தால், அத்தொகுதியில் சம்பந்தப்பட்ட அக்கட்சியே போட்டியிட வேண்டும் என்பது முதல் கொள்கையாகும். ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் உள்ள உறுப்புக் கட்சிகளாலும் இது பெரிதும் மதிக்கப்படுகிறது,'' என்றார் அவர். 

சம்பந்தப்பட்ட இடைத்தேர்தலில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை பிரதிநிதிக்கும் தேசிய முன்னணி வேட்பாளர் குறித்து கருத்துரைக்கையில் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் அவ்வாறு கூறினார்.

மக்கோத்தா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஷரிஃபா அசிசா சைட் சின் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகின்றது.

அங்கு செப்டம்பர் 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கலும், 24ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர் முன்னதாக அறிவித்திருந்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]