அரசியல்

நெங்கிரி வெற்றி; அரசாங்க முயற்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்வதைப் புலப்படுத்துகிறது

18/08/2024 04:24 PM

கோலாலம்பூர்,18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றி நாட்டின் பொளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் ஒருமைப்பாட்டு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளதைப் புலப்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி, நாட்டில் ஒருமைப்பாட்டு அலை உருவாகத் தொடங்கியுள்ளதோடு மக்கள், குறிப்பாக நெங்கிரி தொகுதியினர் மக்களைப் பிளவுப்படுத்தும் அரசியலை நிராகரிப்பதையும் இந்த ஆதரவு காட்டுவதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

கடந்த சில இடைத்தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தேர்தலில், வாக்களித்தவர்களின் எண்ணிக்கை புதிய வரலாறு படைத்துள்ளதையும் அரசாங்கப் பேச்சாளருமான அவர் சுட்டிக்காட்டினார்.  

''இளைஞர்கள் இன்னமும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தைக் குறிப்பாக தேசிய முன்னணியை ஆதரிப்பதை இந்த முடிவு காட்டுகின்றது. அதேவேளையில் அனைத்து மாவட்டங்களின் வாக்களிப்பு மையங்களிலும் தேசிய முன்னணியின் வெற்றி பாணியைப் பார்க்கிறோம்,'' என்றார் அவர்.

தேசிய மாதத்தை முன்னிட்டு இன்று கோலாலம்பூர், கெரிஞ்சி பிபிஆர் குடியிருப்பு மக்களுக்கு தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)